70 ஏ கே 47
சைக்கிள் ஓட்டுவதைப்போலவே தங்கியிருக்கும் இடத்திலிருந்து கூட்டம் பேசுவதும் இந்தியாவை இணைத்துக்கட்டு இயக்கத்தின் முக்கியமான காரியம். ஆனால் அன்று அம்பாலாவில் நடந்தது மக்களிடம் பேசுகிற கூட்டமில்லை. அப்படி இருந்திருந்தால் இந்தியில் பேசுவது நமக்கெதற்கு என்பதைப்போல, வந்த காரியத்தைப் பார்ப்போம் என்று இவன் பாட்டுக்கும் கம்பி நீட்டியிருப்பான்.
கன்யாகுமரியிலிருந்து புறப்பட்டபின் அவர்கள் அனைவரையும் ஒன்றாகத் திரட்டிக் கூட்டம்போல பாபா ஆம்தே பேசுவது அதுவே முதல்முறை. முன்தினம் கர்னாலில் இருந்தபோதே நாளை சுர்ஜித் சிங் பர்னாலா பாபாவை சந்திக்க வருகிறார் என்கிற செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. எல்லையில் வந்து வரவேற்பதற்குப் பதில் பஞ்சாப் முதல்வர் ஹரியானாவுக்கே சந்திக்க வருகிறார் என்றால்… என்று ஏகப்பட்ட ஹேஷ்யங்கள் உலவிக்கொண்டிருந்தன. கண்டிப்பாக அது சம்பந்தமாகத்தான் இந்தக் கூட்டம் என்பது எல்லோருக்குமே தெரிந்திருந்தது என்றாலும் என்ன சொல்லப்போகிறார் என்கிற இனம்புரியாத பீதி எல்லோருக்குள்ளும் இருந்துகொண்டிருந்தது. ஆனால் சகஜமாக இருப்பதைப்போலவே எல்லோரும் இருந்தார்கள். கர்னல் ரேகே, மதுபாய் பண்டித், ஷா காக்கா என்கிற சந்த்ரகாந்த் ஷா, டாக்டர் ஜோஷி போன்ற முக்கியஸ்தர்களின் முகங்கள் இறுக்கமாக இருந்தன. உள்ளே ஏதோ நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கு அதுவே போதுமானதாக இருந்தது.
















Add Comment