நீண்டகாலமாக முதுகுவலியால் அவதிப்படும் ஒருவர் அந்தக் குடிசைக்குள் நுழைகிறார். அங்கிருக்கும் முதியவர் செப்புத் தகடு ஒன்றை எடுத்து வலியால் அவதிப்படுபவரின் முதுகில் வைக்கிறார். எந்தவிதப் பிடிப்புமின்றி அந்தத் தகடு தோலோடு ஒட்டிக்கொள்கிறது. சுற்றியிருப்பவர்கள் ஆச்சர்யமுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மந்திரம் ஓதும் வரை அந்தத் தகடு முதுகிலேயே இருக்கிறது. அதன்பின் தானாகவே கீழே விழுகிறது. முதுகுவலியால் அவதிப்பட்டவர் ‘இப்போது வலி முற்றிலும் குறைந்துவிட்டது’ என்கிறார்.
ஏதோ மாயாஜாலக் காட்சி போலத் தோன்றும் இந்த நிகழ்வு, அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் அமைந்துள்ள ‘மயோங்’ கிராமத்தில் இன்றும் காணக் கிடைக்கிறது. ‘இந்தியாவின் மாந்திரீகத் தலைநகரம்’ என அழைக்கப்படும் இந்த ஊர், அசாமின் தலைநகர் கௌஹாத்தியிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில், பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
சமஸ்கிருதச் சொல்லான ‘மாயா’ என்பதிலிருந்தே ‘மயோங்’ என்ற பெயர் உருவானதாகக் கூறப்படுகிறது. இதைத்தவிர, பழங்குடியின மொழியில் யானையைக் குறிக்கும் ‘மியோங்’ என்ற சொல்லிலிருந்தோ அல்லது சக்தி வழிபாட்டுத் தெய்வமான ‘மா-அங்கோ’ என்பதிலிருந்தோ இப்பெயர் வந்திருக்கலாம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த மண்ணுக்கும் மாயாஜாலங்களுக்கும் இடையிலான தொடர்பு பல நூற்றாண்டுகள் பழைமையானது.















Add Comment