‘காஷ்மீர் மாநிலத்தின் தற்காலிகக் குடியரசு அரசாங்கத்தால் (The Provisional Republican Government of Kashmir State) பிரகடனப்படுத்தப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட சட்டங்கள், உத்தரவுகள், அறிவுறுத்தல்கள் அனைத்தும் மதிக்கப்பட்டு, பின்பற்றப்படவேண்டும். காஷ்மீர் மக்களின் முறையாக அமைக்கப்பட்ட இந்த அரசாங்கத்துக்குக் கீழ்ப்படியாத எவரும் அல்லது முன்னாள் மகாராஜாவுக்கு உதவியாகவும் உடந்தையாகவும் இருப்பவர் எவரும் தேசத் துரோகக் குற்றவாளியாகக் கருதப்பட்டு, அதற்கேற்பத் தண்டிக்கப்படுவார்கள்.’
இப்படிக்கு,
அன்வர், அதிபர், ஜம்மு காஷ்மீர் தற்காலிகக் குடியரசு.
1947 அக்டோபர் நான்காம் தேதி இப்படியோர் அறிவிப்பை வெளியிட்டது ரேடியோ பாகிஸ்தான். பாதுகாப்புத்துறை, நிதித்துறை, கல்வித்துறை, தொழில்துறை போன்றவற்றுக்கும் அமைச்சர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. சர்தார் இப்ராஹீம் கான் பிரதம அமைச்சராக அறிவிக்கப்பட்டார். அறிவிப்பு வெளியாகும்வரை இந்த விஷயம் அவருக்கே தெரியாது என்பதுதான் விந்தை.
அன்வர் என்ற புனைபெயருக்குச் சொந்தக்காரர், குவாஜா குலாம் நபி கில்கர். முஸ்லிம் மாநாட்டுக் கட்சியின் குறிப்பிடத்தகுந்த செயல்பாட்டாளர். முஸ்லிம் மாநாட்டுக் கட்சியைத் தேசிய மாநாட்டுக் கட்சி என்று ஷேக் அப்துல்லா பெயர் மாற்றம் செய்த காலத்துக்கு முன்புவரை அப்துல்லாவுடன் இணைந்து செயல்பட்டுவந்தவர். பிறகு, சவுத்ரி குலாம் அப்பாஸ் தொடங்கிய அனைத்து ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டுக் கட்சியில் தன் செயல்பாடுகளைத் தொடர்ந்தார்.















Add Comment