சாதாரண கிராமத்தில் பிறந்து, பதினோராம் வகுப்பு படிக்கும்வரை இந்தியோ ஆங்கிலமோ தெரியாத ஒருவர்தான் இந்தப் பிரபலச் செயலியின் நிறுவனர் என்றால் நம்ப முடிகிறதா? அவர்தான் லால் சந்த் பிசு. அவர் உருவாக்கிய குக்கூ எஃப்.எம் செயலியின் கதை இது.
2017களில் அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தார் லால். தன் புதிய முயற்சி, மூன்று நோக்கங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். முதலாவது, எது செய்தாலும் அது பல கோடி பயனர்களைச் சென்றடைய வேண்டும். இரண்டாவது, தான் உருவாக்குவது தனக்கும் பயன்பட வேண்டும். மூன்றாவது, அதைச் செய்யத் தனக்கு அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் தேவைப்படக் கூடாது.
இந்த மூன்றையும் மனதில் வைத்து, தான் தினமும் செய்யும் செயல்களை அசை போட்டுப் பார்த்தார் லால். அப்போது அவருக்குத் தோன்றிய ஐடியா ‘பாட்காஸ்ட்’.
இந்தியாவில் அப்போதுதான் பாட்காஸ்ட் என்கிற வலையொலிபரப்புகள் பிரபலமாகத் தொடங்கியிருந்தன. ஆனால் எல்லா பாட்காஸ்ட்களும் ஆங்கிலத்திலேயே இருந்ததால், இந்திய மொழிகளிலும் இதைச் செய்யலாமே என்று எண்ணினார் லால். அவரது நண்பர்கள் விகாஸ் கோயல் மற்றும் வினோத் குமார் மீனாவுடன் சேர்ந்து 2018இல் குக்கூ எஃப்.எம் (Kuku FM) செயலியைத் தொடங்கினார்.















Add Comment