மெட்ரோவில் பைகளைக் கீழே வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இருக்கைக்கு மேலே ஒரு கண்ணாடிப் பலகை இருக்கும். வாயைக் கட்டாத கட்டைப் பையைக்கூடத் துணிந்து மேலே வைக்கலாம். ரயில் அலுங்காமல் குலுங்காமல் செல்வதால் கீழே விழும் சாத்தியங்கள் குறைவு.
ஆனாலும் அந்தக் கண்ணாடிப் பலகையில் யாரும் பைகளை வைப்பது கிடையாது. கொஞ்ச நேரப் பயணம்தான், எதற்குத் தூக்கி மேலே வைக்க வேண்டும் என்ற எண்ணம். வைத்தால் எடுப்பதற்கு மறந்து விடுவோமோ என்ற பயம். பேருந்துகளிலும் ரயில்களிலும் காலுக்கடியிலேயே வைத்துக் கொண்ட பழக்கம். எல்லாமாகச் சேர்ந்து கண்ணாடிப் பலகையை வெறுமையாகவே வைத்திருக்கும்.
அதனால்தான் அங்கு ஒரு பையைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. அது வெளியூர்ப் பயணங்களின்போது கொண்டு செல்லும் பெரிய பையோ, கல்லூரிப் பெண்களின் அலங்காரமான முதுகுப் பையோ அல்ல. அலுவலகம் செல்பவர்கள் எடுத்துச் செல்லும் வழக்கமான உணவுப்பை. அதை வைத்தவர் யாரென்று அறியும் ஆவல் எழுந்தது.















Add Comment