மாயாஜாலக் கதைகளில் வரும் மந்திரவாதியின் உயிர் ஒரு கிளியின் உடலுக்குள் இருக்கும். கிளியைக் கொன்றால் அவர் இறந்து விடுவார். உலகின் எண்ணெய் வர்த்தகம் எனும் உயிர் இருப்பது ஹார்மூஸ் ஜலசந்தி எனும் கிளியிடம். உக்ரைனிலும் காஸாவிலும் வருடக்கணக்கில் நடக்கும் போர்களுக்குப் பிரார்த்தனைகளை மட்டும் செய்து வந்தன உலக நாடுகள். இஸ்ரேலும் இரானும் போரில் குதித்த பிறகு, எப்படியாவது நிறுத்துங்கள் என்று பன்னிரண்டு நாள்களில் முடிவுக்குக் கொண்டுவரக் காரணம் ஹார்மூஸ் ஜலசந்தி எனும் இந்தக் கிளியே.
இரானுக்கும் ஓமனுக்கும் இடையே இருக்கிறது இந்த ஜலசந்தி (குறுகிய நீர்வழி). இதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இரானிடம் இருக்கிறது. பாரசீக வளைகுடாவிலிருந்து கப்பல் போக்குவரத்து அரேபியக் கடல் வழியாக இந்தியப் பெருங்கடலை அடைவதற்கு உதவும் கடலில் இருக்கும் குறுக்குச் சந்து போன்றது. இது இல்லாவிட்டால் நாடுகளைச் சுற்றி நீண்ட கடல் பாதைகளில் வெகு நாள்கள் பயணம் செய்ய வேண்டிவரும். இது சரக்குக் கப்பல்களின் நேரத்தையும் செலவையும் அதிகரிக்கும். இதில் பெரும்பாலும் உலகச் சந்தைக்கு அனுப்பப்படுவன மத்தியக் கிழக்கு நாடுகளில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யும் எரிபொருளும். கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்தால் மருந்து, பெயிண்ட் ஆகியவற்றின் உற்பத்தியாளர்கள், விமானத்துறை, உரம், சிமெண்ட், ஸ்டீல் என அன்றாட நுகர்வோர் பொருள்கள் உள்பட அனைத்தும் விலை உயரும். பெட்ரோல் விலையில் ஆரம்பித்து தக்காளி, வெங்காயம் வரை விலையேற்றம் நமது சமையலறை வரை பாதிக்கும்.















Add Comment