மெலனியா ட்ரம்ப்
செவ்னிகா ஒரு சிறிய நகரம். ஸ்லோவேனியாவில் உள்ளது. அந்நகரில் வசித்து வந்த அமாலிஜா க்னாவ்ஸ் என்ற பெண்மணி, குழந்தைகளின் உடைகளுக்கு பேட்டர்ன் வடிவமைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு மகள் உண்டு. பெயர் மெலானிஜா. மிகவும் அமைதியான சிறுமி. அதிகம் பேசாதவள். ஆனால் கூர்ந்த கவனம் அனைத்திலும் உண்டு அவளுக்கு. அன்றும் அவள் அமைதியாகத் தன் தாய் வேலை செய்வதைத்தான் கவனித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிறுமியின் கண்களில் ஆர்வம் தெரிந்தது. அழகை, நேர்த்தியை, கலையை நோக்கிய ஓர் ஏக்கம் இருப்பது போலத் தென்பட்டது. அன்று சொல்லியிருந்தால் அவளது அம்மாகூட நம்பியிருக்க மாட்டார். இன்று அதே சிறுமி உலகின் மிகச் சக்திவாய்ந்த நாட்டின் முதல் பெண்மணி. ஆனால் அவளது உண்மையான பெருமை அந்தப் பதவியில் அல்ல – அவரது குணத்தில் உள்ளது.
மெலனியா எப்போதுமே வார்த்தைகளை விடச் செயல்களில் நம்பிக்கை வைப்பவர். ஆரவாரமின்றிக் கவனத்தை ஈர்க்கும் சக்தி தன்னிடம் இருக்கிறது என்று சிறு வயதிலேயே அவருக்குத் தெரியும். அவரது அமைதியான நடவடிக்கைகள், சுற்றியுள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 16 வயதில் மாடலிங் உலகில் நுழைந்தபோது, அவர் மற்றவர்களைப் போல் களேபரம் செய்யவில்லை. மாறாக, சிரமமற்ற நேர்த்தியுடன், கண்ணியத்துடன் தனது வேலையைச் செய்தார்.
இந்த அமைதியான குணம்தான் அவரை டொனால்ட் டிரம்ப் போன்ற ஆரவாரமான நபரிடம் இட்டுச் சென்றது. இருவரும் வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்கள் – ஒருவர் ஆர்ப்பரிக்கும் நீரருவி, மற்றொருவர் அமைதியான ஓடை. மெலனியாவின் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயமும் துணிச்சலின் கதை. ஒரு கம்யூனிஸ்ட் நாட்டில் பிறந்து, மாடலிங் கனவு கொண்ட சிறுமி. பாரிஸ், மிலான் ஊடாக நியூயார்க் வரை பயணித்த இளம்பெண். 27 வயதில் ஒரு புதிய நாட்டில், புதிய மொழியில், புதிய கலாசாரத்தில் தனது இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.















Add Comment