பங்கு
கட்சி தொடங்கியது முதல் இன்றுவரை ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தைத் தொடர்ந்து அரசியல் களத்தில் எழுப்பி வரும் ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தேர்தல் வரும்போதெல்லாம் அந்த முழக்கத்துக்கு அவர்களே விடுமுறை அளிப்பதும் தொடர்கதையாகிவிட்டது.
இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெற்றுவிடலாம் என்ற அவர்களுடைய கனவிலும் இப்போது கல்லெறியப்பட்டிருக்கிறது. புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்ததும், காங்கிரஸ் கட்சியின் விடாப்பிடியான அடமும் மற்ற கட்சிகளைப்போல விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஆனாலும் கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஆறு தொகுதிகளைவிட இரண்டு தொகுதிகளில் அதிகமாகப் போட்டியிடவிருக்கிறது விசிக. மகிழ்ச்சி இல்லை என்றாலும், கூட்டணியின் நலன் கருதி வருத்தமும் இல்லை என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் இப்போதைய நிலைப்பாடு.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சியாக அடையாளப்படுத்தப்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கடந்த காலங்களில் திமுக, அதிமுக என இரண்டு கூட்டணிகளிலும் இணைந்து தேர்தலைச் சந்தித்திருக்கிறது. சாதியக் கட்சிகளோடும் மதவாதக் கட்சிகளோடும் கூட்டணியில்லை என்ற நிலைப்பாட்டை இப்போது எடுத்திருந்தாலும், இதற்கு முன்னர் பாரதிய ஜனதா கூட்டணியிலும், பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகித்த கூட்டணியிலும் இடம்பெற்றிருந்தது விசிக.















Add Comment