33 – மீட்டெடுக்கப்பட்ட அடையாளம்
உலக அரங்கில் ரஷ்யாவின் எதிர்பார்ப்புகளைத் தெளிவுபடுத்திய புதின், ரஷ்யாவையும் அதற்காகத் தயார்ப்படுத்தினார். ரஷ்யப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார்.
சோவியத்தின் பிரிவுக்குப் பிறகு ரஷ்யாவுக்கென்று தனி அடையாளம் இல்லாமல் போனது. பிரிந்து சென்ற மற்ற நாடுகள் தங்களுக்கான அடையாளத்தை உண்டாக்குவதில் முனைப்புடன் இறங்கின. சோவியத்தையே தனதாகக் கருதிய ரஷ்யா, அதன் அடையாளங்களையே தனது அடையாளமாகவும் கொண்டது. சோவியத்தின் பெருமைகளுடன் புதிய ரஷ்யச் சித்தாந்தம் உருவாக்கப்பட்டது.
தேசபக்தி, மதம், கலாசார விழுமியங்கள் மூன்றும் ரஷ்ய அடையாளத்தின் அடிப்படைகளாக மாறின. ரஷ்யாவுக்கென புதிய தேசிய கீதம் உருவாக்கப்பட்டது. வார்த்தைகளே இல்லாமல் முன்னர் போரிஸ் எல்ஸின் உருவாக்கியிருந்தது மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. சோவியத்தின் தேசிய கீதத்தை எழுதிய செர்கெய் மிக்கல்கோஃப் ஓய்விலிருந்து வரவழைக்கப்பட்டார். ரஷ்யாவின் புதிய கொள்கைகளுக்குத் தகுந்த தேசிய கீதத்தை உருவாக்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. லெனின், கம்யூனிசம் போன்றவை கவனமுடன் நீக்கப்பட்டு கடவுள், புனித ரஷ்யா போன்ற நடுநிலை வார்த்தைகள் இடம்பெற்றன.















Add Comment