60 மொழி
இன்னும் இரண்டொரு நாட்களில் குஜராத் வந்துவிடும் எனும்போதே அஹூஜாவை கையில் பிடிக்கமுடியவில்லை. நடுத்தர வயதைத் தாண்டியவர்போலத் தொற்றமளிப்பவர்போய் இப்படிக் குதிப்பதைப் பார்க்க எரிச்சலாய் வந்தது. எரிச்சலுக்கு முக்கியக் காரணம், கண்ணில் படும்போதெல்லாம் இவனுக்கு இந்தி தெரியவில்லை என்பதால் ராஷ்ட்ர பாஷா ராஷ்ட்ர பாஷா என்று சொல்லி, சுந்தரேசனே தேவலாம் என்கிற அளவிற்கு இவனைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தார் என்பதுதான்.
அஹூஜாவின் படுத்தல், தெலுங்கை விடவும் இந்தியும் உருதுவும் அதிகமாகப் புழங்கிக்கொண்டிருந்த ஹைதராபாத்திலேயே ஆரம்பமாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அவர் இந்தியில் நான்கைந்து வக்கியங்கள் பேச இவன் இங்கிலீஷில் முறைப்பாக ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிக்கொண்டிருந்தது அவர் பார்வையில் இவனை இந்தியாவை ஆண்ட வெள்ளைக்காரனாகக் காட்டிக் கடுப்பேற்றியிருக்கவேண்டும். அவர் இந்தியில் சொல்வது இவனுக்குக் கொஞ்சமாவது புரிந்தது. இங்கிலீஷ் தெரியாததை மறைக்க இவன் ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தில் சொல்லி மீதியை சைகையில் பூர்த்தி செய்துகொண்டிருந்தான். ஆனால் அது, உன்னுடன் ஓரிரு வார்த்தைகள் பேசுவதே அதிகம் என இவன் அவரிடம் ஆணவமாக நடந்துகொள்வதாய் தோன்றவைத்திருக்கவேண்டும். போட்டோவுக்குக் கூட சிரிக்காத இவன் முகபாவம் காரணமாக, கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு ஓரிரு சொற்களுடன் தன்னை அவமானப் படுத்துவதாக அவர் எடுத்துக்கொண்டார். போகப்போக, எதிர்ப்படும் சமயங்களில் எதுவுமே பேசாமல் நகர்வதைத் தம்மை துச்சமாக நினைத்து வேண்டுமென்றே தவிர்ப்பதாகத் தப்பாக எடுத்துக்கொண்டு வலிந்து வந்து சண்டை போடுவது போலப் பேச முயன்றுகொண்டிருந்தார். சமயங்களில் தாண்டிப்போன பிறகும் இவன் முதுகைப் பார்த்துக் கத்திக்கொண்டிருந்தார்.















Add Comment