நூற்றைம்பது வருட கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு பெயர்களுக்கு இன்று வரை இணை இல்லை. ஒருவர் டொனால்ட் பிராட்மேன், இன்னொருவர் கார்பீல்ட் சோபர்ஸ்.
கபில் தேவ், இம்ரான் கான், இயான் போத்தம், ரிச்சர்ட் ஹாட்லி, ஜாக்கஸ் காலிஸ் போன்ற ஆல் ரவுண்டர்களின் நட்சத்திர வானில் சோபர்ஸ்தான் துருவ நட்சத்திரம். ஆல் ரவுண்டர் என்ற சொல் அவரிடமிருந்துதான் தொடங்கியது. அவர் ஓய்வு பெறும்போது ரன் பட்டியலில் முதலிடம், விக்கெட் வரிசையில் ஏழாம் இடம், கேட்சுகளில் நான்காம் இடம், சாதனை ஸ்கோர் 365, ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் எனப் பல கிரீடங்களைச் சுமந்திருந்தார்.
1953இல் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்திலிருந்து சோபர்ஸின் முதல்தர கிரிக்கெட் அத்தியாயம் தொடங்கியது. போலிஸ் கிரிக்கெட் அணியில் எடுக்க பேண்ட் வாத்தியம் வாசிக்கச் சொல்கிறார்கள். கொம்பு வாத்தியம் ஊதக் கற்றபடி கிரிக்கெட் விளையாடுகிறார். பார்படாஸ் போலிஸ் அணியிலிருந்து பிராந்திய அணிக்குப் பதவி உயர்வு. சுழற்பந்து வீச்சாளராக ஆடி இந்திய அணியின் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். முதல் விக்கெட் பாலி உம்ரிகர். அப்போது சோபர்ஸுக்கு வயது 16.
















Add Comment