5.ஓயாத விழிப்பு
(லியோனார்டோ டா வின்சி)
கிபி பதினைந்தாம் நூற்றாண்டின் மிலன் நகரம். அதிகாலை நான்கரை மணிக்குத் தேவாலய மணிகள் ஒலித்தன. தனது கலைக்கூடத்தில் நின்றிருந்தார் லியோனார்டோ டா வின்சி. அவர் மனம் எப்போதும் ஓவியங்களைப் பற்றியும், பறக்கும் இயந்திரங்களை வடிவமைப்பதிலும் மூழ்கியிருந்தது. அவரது காலத்தில் அவை வெறும் வரைபடங்களாகவே இருந்தன. ஆனால், பிற்கால நவீன ஹெலிகாப்டர் மற்றும் பாராசூட்டுகளுக்கு அவையே முதன்மைத் தூண்டுகோலாக அமைந்தன. இத்தகைய தேடல்களிலேயே அவரது இருபத்தி நான்கு மணிநேரமும் சுழன்றது.
டா வின்சி விழித்திருக்கும் நேரமும் அவருடைய தூக்க நேரமும் விசித்திரமானவை. அவர் கடிகார நேரப்படி வாழவே இல்லை. சில நாள்கள் விடியற்காலை முதல் இரவு வரை தொடர்ந்து வரைந்து கொண்டே இருந்தார். அப்போது உணவுக்கும் உறக்கத்திற்கும் இடமில்லை. சில நாள்கள் தூரிகையையே தொடாமல் அமர்ந்திருப்பார். ஓவியத்தின் முன்னால் கைகளைக் கட்டிக் கொண்டு உறைந்து போன பொழுதுகளும் உண்டு. தனக்குள் வடிவங்களை ஆராய்வதே அவரது முழுப்பொழுதாக இருந்தது.
பிற்காலத்தில் டா வின்சி பற்றி ஒரு கதை பரவியது. அவர் ஒவ்வொரு நான்கு மணிநேரத்துக்கும் ஒருமுறை இருபது நிமிடங்கள் மட்டுமே தூங்கினார் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். ‘பலகட்டத் தூக்க முறை’ எனப்படும் இத்தகவலுக்கு வரலாற்று ஆதாரங்கள் ஏதுமில்லை. அவர் இரவில் சாதாரணமாகவே உறங்கினார். ஆனால் விழித்திருக்கும்போது முற்றிலும் ஓவியங்களைப் பற்றி மட்டுமே யோசித்தார்.
















Add Comment