இந்த உலகம் வலியவர்களுக்கானது. திறன் மிகுந்தவர்களுக்கானது, வாய் கிழியப் பேசுபவர்களுக்கானது. பிறகு ஏன் என்னைப் போன்ற சாதாரணர்களையும் உள்ளே விட்டு வேடிக்கை பார்க்கிறது இயற்கை?
இயலாமையும் ஆத்திரமும் பொங்கிக்கொண்டிருந்தது. மீடியாக்கர். என்றால் அரைகுறை. எத்தனை எளிதாகச் சொல்லிவிட்டாள்? அத்தனை பேர் முன்னால் அதைச் சொல்லவேண்டிய தேவை என்ன? அடித்துக் கொடுத்திருந்த காண்ட்ராக்ட் கோப்பில் ஏதோ கூட்டல் பிழை.
திருத்திக் கொள்ளக்கூடிய பிழை. வெறும் எண்கள். அவற்றை எளிதாக மாற்றமுடியும். அதற்கு அவள் உதிர்த்துச் சென்ற வசவுகளின் உச்சம்தான் அது. அரைகுறை. கால்கள் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தன. வயிற்றுக்குள் இன்னும் அந்த வேதனை நிலைத்திருந்தது. கண்கள் செருகிக்கொண்டு வந்தன. அவமானம். ஆற்றாமை. அடிவயிற்றிலிருந்து பொங்கி வரும் வேதனை.















Add Comment