மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிய கணம் முதலே பொய்களும் பிறந்துவிட்டன. தொடர்பு மொழி என்ற ஒன்று தோன்றும் முன்னரே உடல்மொழியால் பொய் சொல்லத் தொடங்கிவிட்டது மனித இனம். அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. நாம் வாழ்ந்த, வாழுகின்ற சூழல், உண்மை பேசும் மனிதர்களுக்குச் சாதகமாக எப்போதுமே இருந்ததில்லை.
ஆதிமனிதன் உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் பொய்களைச் சொல்லத் தொடங்கினான். அவன் சமூகமாக வாழத் தலைப்பட்டு, குடியிருப்புகளை உண்டாக்கினான். அதன் தொடர்ச்சியாகக் குடிகள் தோன்றின. வெவ்வேறு பழங்குடிக் குழுக்களிடையே மோதல்களைத் தடுக்கப் பொய்கள் அவசியமாக இருந்தன. காலப்போக்கில் குடியிருப்புகள் கிராமங்களாகவும், நகரங்களாகவும், பெருநிலங்களாகவும், அரசுகளாகவும் வளர்ந்துகொண்டே சென்றன. அவற்றுடன் சேர்ந்து பொய்களும் பரிணாம வளர்ச்சியடைந்து கொண்டிருந்தன.
தங்களது எண்ணங்களையும் உள்நோக்கங்களையும் மறைத்து வைத்துக்கொள்வது வாழ்தலுக்கான அத்தியாவசியமான உத்தியாகக் கருதப்படுகிறது. தனி மனிதர்கள் முதல் நாடுகள் வரை எவருமே இதற்கு விலக்கல்ல. நாடுகளுக்கிடையே உராய்வுகளைத் தடுக்கும் மசகு எண்ணெய்யாகப் பயன்படுகின்றன பொய்கள். இல்லையேல் ஆங்காங்கே தீப்பொறிகள் பறந்துகொண்டிருக்கும்.















Add Comment