வற்புறுத்தாத பொழுதுகள்
(லா வோ த்சூ)
கி.மு. ஆறாம் நூற்றாண்டின் சீன நிலப்பரப்பு. சௌ (Zhou) வம்சத்தின் வீழ்ச்சித் தொடக்கக் காலம் அது. பேரரசு முழுவதும் அரசியல் குழப்பங்களும் போர் மேகங்களும் சூழ்ந்திருந்தன. அக்காலகட்டத்தில், அதன் தலைநகரமான உலூயோயாங்கில் (Luoyang) அரச ஆவணக் காப்பகம் அமைந்திருந்தது. அது சாதாரணமான இடமல்ல. ஒட்டுமொத்த தேசத்தின் அறிவுப் புதையல்.
சுவர்களில் இருக்கும் விளக்குகளில் விலங்கின் கொழுப்புகள் எரிந்து கொண்டிருந்தன. அவற்றின் மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில் ஆவணக் காப்பகத்தின் உட்பகுதி மங்கலாகத் தெரிந்தது. அங்கே நாட்டின் சட்டங்கள், விண்மீன் வரைபடங்கள், பட்டுத்துணிகளில் வரையப்பட்ட தேசப்படங்கள் என அனைத்தும் மூங்கில் சுருள்களாக அடுக்கப்பட்டிருந்தன. காலம் கடந்ததில் அந்தச் சுருள்கள் பழுப்பு நிறத்துக்கு மாறியிருந்தன.
மதில்களுக்கு வெளியே பேரரசின் வீழ்ச்சிக்கான சலசலப்புகள் இருந்தன. ஆனால், ஆவணக் காப்பகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த லா வோ த்சூவிடம் ஒரு விசித்திரமான அமைதி குடியேறியிருந்தது. அன்றைய அரசவையில் அவர் வகித்த பதவியின் பெயர் ‘ஜிஷி’. அதாவது தலைமை ஆவணக்காப்பாளர் என்று வைத்துக் கொள்ளலாம். அல்லது வரலாற்றாசிரியர். அது வெறும் நூலகர் பணி அல்ல. ஜோதிடம், சடங்குகள், அரச ரகசியங்கள், வரலாற்று நிகழ்வுகளைத் துல்லியமாகப் பதிவு செய்யும் மிக உயரிய, கடுமையான நெறிமுறைகள் கொண்ட பொறுப்பு.















Add Comment