சிவசாகர் மாவட்டத்தில் ஹோலாங் கடோனி என்ற கிராமம், மேலை அஸ்ஸாம் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளது. கடந்த ஜூலை 19 அன்று அண்டை மாநிலமான நாகாலாந்தின் மலைப்பகுதிகளிலும், அஸ்ஸாமிலும் வரலாறு காணாத மழை. இப்பகுதிகளில் ஓடும் திக்ஹோ, தாரிகா நதிகள் நிரம்பி வழிந்தோடின. மேலும் நீர் பெருக்கெடுத்ததால் உடைப்பு ஏற்பட்டது. ஒரு மணிநேரத்தில் கிராமம் மூழ்கியது.
ரேகாமணி கோகோய் என்ற பெண் தன் வீடு மூழ்குகிறதே என்று, ஏழு வயது மகனுடன் அருகிலிருந்த வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தாள். அங்கேயும் நீர் அதிகரிக்க, வேறு வழியின்றி அக்கம்பக்கத்தினர் நால்வருடன் சேர்ந்து, அருகிலிருந்த மா மரத்தின் கிளைகளில் ஏறிக்கொண்டாள். மழையால் ஏற்பட்ட குளிர், கீழே வெள்ள நீர், உணவோ குடிநீரோ இல்லை. சுற்றிக் காரிருள். தான் இறந்தாலும் மகனையாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் பன்னிரண்டு மணிநேரம் உதவிக்காக மரத்திலேயே காத்திருந்தாள். காலையில் மாநிலப் பேரிடர் குழு வந்து அவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றது.
அதே சிவசாகர் மாவட்டத்தில் நசீரா என்ற இடத்தில் ஹிருதீப் பனிக்கா என்ற பதின்மூன்று வயதுச் சிறுவன், தனது மூன்று மாத நாய்க்குட்டி வெள்ள நீரில் அடித்துச் செல்வதைப் பார்த்தான். மனம் பொறுக்காமல் நீரில் குதித்தவன், நாயை வெள்ள நீரிலிருந்து தூக்கி எறிந்தான். ஆனால் அவனால் நீந்திக் கரையேற முடியவில்லை. அடித்துச் செல்லப்பட்டு விட்டான். இரண்டு சம்பவங்களும் பத்து நாட்களாகியும் வெள்ளம் வடியாத அஸ்ஸாமில் நடைபெற்றவை.















Add Comment