மற்ற தொழில் செய்பவர்களுக்கெல்லாம் எங்கள் தொழில் எளிமையானது என்ற கருத்து இருக்கிறது. உள்ளே போக வேண்டும், தேவையான பணத்தை எடுத்துவிட்டு வெளியேறி விட வேண்டும், அவ்வளவுதான் என்ற எண்ணமே பலர் மனதில் இருக்கிறது. ஆனால் உண்மையில் எங்கள் பணி அவ்வளவு சுலபமானதல்ல, மிகவும் சிக்கலானது. பல மணிநேரத் திட்டமிடல், தூக்கமில்லாத இரவுகள். வாடிக்கையாளர்களைச் சரியாகக் கணிக்கத் தவறுவதால் ஏற்படும் முடிவில்லாப் பதற்றத்தை எதிர்கொள்ளும் மனம்.
வெளித் தோற்றத்துக்கும் உள்ளே இருப்பவற்றுக்கும் வர வரப் பொருத்தமே இல்லாமல் போய்விட்டது. இப்போதெல்லாம் வீட்டு உரிமையாளர்கள் தங்களின் பங்களிப்பை ஒழுங்காகச் செய்வதே இல்லை. புறமொன்று காட்டி, உள்ளொன்று வைத்து எங்களை ஏமாற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருந்தால் எப்படி எங்கள் தொழில் நடக்கும்?
எடுக்கக்கூடிய பொருட்களை வைப்பதில்லை, எளிதில் அணுகக்கூடிய சூழலைப் பராமரிப்பதில்லை. இருப்பிடத்தைச் சுற்றி எங்கள் தொழிலுக்கு எதிரான சாதனங்களை வேறு நிறுவி வைக்கிறார்கள். எங்களுடைய வாடிக்கையாளர்கள் எங்களுக்கு உதவும் விதமாக எதுவும் செய்யாத இந்த நிலையில், எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் வருமானத்துக்குப் பதிலாக வருத்தம்தான் வளர்ந்து கொண்டே போகிறது.















Add Comment