ஆற்றில் குளித்துவிட்டுக் கரை ஏறும்போது ஏதோவொன்று தலை மீது பட்டுக் கீழே விழுந்தது. அதன் பழுப்பு நிற ஓடு வெடித்து உள்ளிருக்கும் புளி தெரிந்தது. மகள் முகர்ந்து பார்க்கக் கையில் எடுத்தாள். கண்களும் மூக்கும் ஒரே நேரத்தில் மூளைக்குச் சமிக்ஞை அனுப்ப நாக்கில் எச்சில் ஊறியது.
தயிர் சாதப் பிரியர்களையும் பிரியாணி வெறியர்களையும் இதற்காகக் கையேந்த வைக்கக்கூடியது புளிக்குழம்பு. புளிப்பு, காரம், உப்பை ஒன்றாகக் கூட்டிச் சேர்த்தால் புளிக்குழம்பு வைத்துவிடலாம் என்பது வெட்டிப்பேச்சு. அதற்கென்று ஒரு பக்குவம் இருக்கிறது.
ஒவ்வொன்றுக்கும் அதனதன் கர்ப்ப காலம் உண்டு. புளியை ஊறவைத்துக் கரைத்து, கொத்துமல்லி, மிளகாய், மஞ்சள் தூள்கள் சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடுங்கள். கால் பாகம் வற்ற வேண்டும்.
அன்றைய சமையல் புளிக்குழம்பு என்பதை வீட்டுக்கு அறிவிப்பது நல்லெண்ணெய். தாராளமாகச் சேர்த்து அதில் நறுக்கிய பூண்டை வதக்க வேண்டும். அதற்குள் வாண்டுகள் மோப்பம் பிடித்துச் சமையலறைக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் கண் முன்னால் நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள். அந்த மணத்தால் உங்கள் மதிப்பு கூடும்.















Add Comment