216. கைது நாடகம்
காங்கிரஸ் கட்சி பால் வார்த்த பாம்பு ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவின் முழுக் கதையைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
பிந்தரன்வாலேவின் இயற்பெயர் ஜர்னைல் சிங் பிரார். அன்றைய ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில், 1947 ஜூன் இரண்டாம் தேதி பிறந்தார்.
விவசாயியான அப்பா ஜோகிந்தர் சிங் பிரார், உள்ளூர் சீக்கியச் சமூகத்தில் முக்கியஸ்தராக இருந்தார். அம்மா, நிஹால் கவுர்.
ஏழு சகோதரர்கள், ஒரு சகோதரி என்று பெரிய குடும்பத்தில் ஏழாவது குழந்தையாகப் பிறந்தவர் ஜர்னைல் சிங்.
ஆறு வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டு, ஐந்தாண்டுகள் மட்டுமே பள்ளிக்குச் சென்றார். அதன் பின்னர் தந்தையோடு பண்ணையில் வேலை செய்யப் போய்விட்டார்.
பதினெட்டு வயதில் பஞ்சாபில் மோகா என்ற ஊருக்கு அருகில் உள்ள பிந்த்ரன் கலான் என்ற ஊரில் உள்ள தம்தமி டக்சல் என்ற சீக்கிய மரபு வழிக் கல்வி மற்றும் கலாசாரத்தைக் கற்பிக்கும் மதப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார்.
அங்கே ஓராண்டு படிப்புக்குப் பின், மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி, பிலாஸ்பூரைச் சேர்ந்த பிரிதம் கவுரை மணந்தார். அவர்களுக்கு இஷார் சிங், இந்தர்ஜித் சிங் என்று இரு மகன்கள்.
















Add Comment