1964, சென்னை பாரிமுனையிலுள்ள கோகலே அரங்கில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கம் ஒன்றினைக் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அக்கருத்தரங்கில் திமுகவின் பொதுச்செயலாளர் சி. என். அண்ணாதுரை கலந்து கொண்டார். சென்னை மாநிலக் கல்லூரியின் மாணவரான கோபால்சாமி அக்கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேச்சை அமைத்த விதமும், குரலில் தொனித்த ஆவேசமும் அண்ணாதுரையைக் கவர்ந்தன. கருத்தரங்கம் முடிந்ததும் கோபால்சாமியை வெகுவாகப் பாராட்டினார். அன்று முதல் வை.கோபால்சாமி என்னும் வைகோ, திராவிடச் சித்தாந்தத்தைப் பூரணமாக ஏற்றுக் கொண்டார்.அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்.
வை. கோபால்சாமி (வைகோ) 1944ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் பிறந்தார். பள்ளிக்காலத்தில் இருந்தே பேச்சுக்கலையில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரி நாட்களில் அவரது பேச்சுக்குத் தனி ரசிகர் கூட்டம் உருவானது.
1970ஆம் ஆண்டு, கலிங்கப்பட்டி உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பாகப் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றிபெற்று ஊராட்சி மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார். திமுகவின் மாநில மாணவரணி இணைச் செயலராகவும், பிற்காலத்தில் திமுகவின் தேர்தல் பிரசாரச் செயலாளராகவும் பணியாற்றினார். நெல்லை வட்டாரத்தில் திமுகவின் பிரதான அடையாளமாக அறியப்பட்டார்.
















Add Comment