என்ன சொல்லப்பட்டது?
ஒரு கருத்தை வெளிப்படுத்த நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் நம் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கின்றன. நாம் ஒருவரை ஏமாற்ற நினைக்கும்போது, குறிப்பிட்ட சில வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் பயன்படுத்துவோம். அந்தப் பதங்கள் நாம் சொல்லும் பொய்க்கு உண்மை போன்ற தோற்றத்தை அளிக்கக் கூடியவையாக இருக்கும். உண்மைக்கும் உண்மை போன்று அரிதாரம் பூசி வரும் பொய்க்கும் நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. இந்த அத்தியாயத்தில் பொய்யர் பொதுவாகப் பயன்படுத்தும் பதங்களைத்தான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
காலையில் நீங்கள் அலுவலகத்தில் நுழையும்போது யாராவது குட் மார்னிங் சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? பெரும்பாலும் உங்கள் மறுமொழியும் குட் மார்னிங் என்பதாகத்தானே இருக்கும்? ஹாய், ஹலோ போன்ற வார்த்தைகளுக்கும் இது பொருந்தும். இதற்கு ஓர் உளவியல் காரணம் உண்டு. அவருக்குப் பிரத்தியேகமாகப் பதில் கூற நீங்கள் சிந்திக்க வேண்டும். அதற்குச் சற்று நேரமும் எடுக்கும். அதைவிட, அவர் வார்த்தைகளையே பயன்படுத்தி பதில் கூறும்போது வேகமாகவும், சிந்திப்பதற்கு ஆற்றலைச் செலவிடாமலும் உங்களால் மறுமொழி அளிக்க முடியும்.
பொய்யருக்குச் சிந்திப்பது ஒரு சுமை என்று முன்னரே பார்த்தோமல்லவா? ஏனெனில் அவர் காக்னிடிவ் ஓவர்லோட் நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பார். அதோடு, பொய்யர் அமைதியை அடியோடு வெறுக்கிறார். எதிரே உள்ளவர் கேட்கும் கேள்விக்குத் தக்க பதில் கூற அவர் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு கூடுதல் நொடியும் அவரது அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே, உடனடியாகப் பதிலளிப்பதைத்தான் அவர் தேர்ந்தெடுப்பார். வினாவிலிருந்தே பதிலைத் தயாரிப்பது அவருக்கு எளிது.















Add Comment