19 – இருநூறு மெழுகு பொம்மைகள்
23-10-2002
டுப்ராவ்கா திரையரங்கு,
மாஸ்கோ.
‘நோர்ட் அஸ்ட்’ எனும் புகழ்பெற்ற ரஷ்ய இசை நாடகம் நடந்து கொண்டிருந்தது. ஆர்க்டிக் துருவ ஆராய்ச்சிக்குச் சென்ற காதலியின் தந்தையைக் கண்டுபிடிக்க விமானியாக முடிவு செய்கிறான் காதலன். பயிற்சியின் முடிவை சக விமானிகளோடு காதலன் கொண்டாடும் காட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது.
முகமூடி அணிந்த ஒருவன் நாடக மேடையின் இடதுபுறத்திலிருந்து நுழைகிறான். கைத் துப்பாக்கியிலிருந்து சரமாரியாகக் குண்டுமழை பொழிகிறான். அட, கதாநாயகன் விமானியாகியதை இப்படியும் கொண்டாடுகிறார்களா என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பார்வையாளர்கள். குண்டு சத்தம் திரையரங்கின் மற்ற பகுதிகளிலும் கேட்டது. இது நாடகமல்ல, தீவிரவாதிகளின் தாக்குதல் என்பதைப் பிறகுதான் புரிந்து கொண்டார்கள்.
ஆயுதமேந்திய தீவிரவாதிகள் திரையரங்கு முழுவதும் நிறைந்திருந்தார்கள். தலையைச் சுற்றிக் கறுப்பு ஹிஜாப்களையும், இடுப்பைச் சுற்றித் தற்கொலை பெல்ட்களையும் அணிந்த இளம்பெண்களும் இருந்தார்கள். ‘பிளாக் விடோஸ்’ என்ற பெயரில் ரஷ்ய ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற தங்கள் வீட்டு ஆண்களுக்காகப் பழிதீர்க்க வந்திருந்தார்கள். திரையரங்கின் தூண்களைச் சுற்றி வெடிமருந்தைக் கட்டி அதன்மேல் செச்சனியக் கொடியைப் பறக்க விட்டார்கள்.















Add Comment