110. ஆண்டவனும் ஆள்பவனும்
ஐயனே, கவனியுங்கள். நிலம் உரு மாறுவதில்லை. நீர் நிறம் மாறுவதில்லை. தீ தனது குணத்தை மாற்றிக்கொள்வதில்லை. வளியின் இயல்பும் என்றும் மாறாததே. நான் அவற்றை நிகர்த்தவனென்று நம்புகிறேன். அப்படியே இருக்க விரும்புகிறேன். ஆனால் என் குடிசையும் என்னைப் போலவே இருப்பதை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை. இங்கிருந்து நான் புறப்பட்டுப் பல கிழமைகளாகிவிட்டன. சரியான எண்ணிக்கைகூட எனக்கு நினைவில்லை. கதவற்ற என் குடிசைக்குள் காற்றைத் தவிர வேறெதுவும் வந்து போவதில்லை என்னும் அதிசயத்தைக் கண்டுகளியுங்கள்.
சார்வாகன் மிகவும் தீவிரமான முகபாவத்துடன் இதனைச் சொன்னதும் கருவூர்ச் சித்தர் சிரித்தார்.
உண்மையே ஐயனே. நான் புறப்பட்டபோது எப்படி விட்டு வந்தேனோ, அப்படியேதான் இப்போதும் உள்ளது. வெளியே பாதிரி மரங்கள் அசைந்தாடுகின்றன. செடி கொடிகள் அசைந்தாடுகின்றன. எத்தனையோ இலைகள் உதிர்கின்றன. சருகாகின்றன. காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றன. அவைகூட இத்திறந்திருக்கும் குடிசைக்குள் நுழைய விரும்புவதில்லை.
சொல்லிவிட்டு இப்போது அவனே சிரித்தான். சித்தர் புன்னகையுடன் அவனையே உற்று நோக்கிக்கொண்டிருந்தார்.
















Add Comment