வெனிசுவேலாவின் சர்வாதிகாரியாகப் பதின்மூன்று ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர் நிக்கோலஸ் மதுரோ. அவரது ஆட்சியை அமெரிக்கா கவிழ்த்து, நாடு கடத்தி வந்து ஒரு மாதம் முடிந்துவிட்டது. ஆயினும் வெனிசுவேலாவில் ஜனநாயக மாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறார் டிரம்ப்.
போதைப்பொருள் தீவிரவாதத்தை ஒழித்திடவே மதுரோ நீக்கப்பட்டார் என்று முதலில் ஒரு காரணம் சொன்னது அமெரிக்கா.
2018 மற்றும் 2024இல் நடைபெற்ற தேர்தல்களில் பெருமளவில் முறைகேடு செய்தே மதுரோ வெற்றி பெற்றார் என்பது நடுநிலையாளர்களின் கருத்து. ஆகையால் அவரை அதிபராக அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. இது அமெரிக்க நடவடிக்கையை நியாயப்படுத்தச் சொல்லப்பட்ட மற்றொரு காரணம்.
மதுரோவை அகற்றுவதில் அமெரிக்கா காட்டிய வேகம் வெனிசுவேலாவில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் சர்வாதிகார ஆட்சிக்குப் பக்கபலமாக இருந்த அத்தனை பேரும் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றனர். வெனிசுவேலாவில் சர்வாதிகாரி ஒழிந்தாலும் சர்வாதிகாரம் தொடர்கிறது. இப்போதைக்கு, தான் சொல்வதைக் கேட்டு நடக்கும் ஆட்சியாளர்கள் அங்கிருந்தால் போதும் என்று முடிவில் இருக்கிறார் போலும் டிரம்ப்.















Add Comment