துபாய் என்றதும் புர்ஜ் கலிஃபா முதல் பல பிரம்மாண்டங்கள் நினைவுக்கு வரும். அதைப் போலவே சுத்தமும். பாலைவனத்துக்கு நடுவில் இருக்கும் பெட்ரோல் ஸ்டேஷனில் இருக்கும் கழிப்பறை கூடச் சுத்தமாக இருக்கும். இப்போது துபாய் அரசாங்கம் ஒருபடி மேலே சென்று, சுற்றுலாத் தலங்களை மேலும் துப்புரவாக வைக்கத் தானியங்கி ரோபோக்களை உபயோகிக்க ஆரம்பித்துள்ளது.
ஜுமேரா, உம் சுகீம் என்ற இரண்டு முக்கியக் கடற்கரைகளை அதிநவீன ஏஐ தானியங்கி ரோபோக்கள் சுத்தம் செய்கின்றன. சுற்றுலா வருபவர்களுக்கு இந்த இரண்டு இடங்களும் முக்கியம். இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து குப்பைகளை அகற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதால் சுத்தத்துக்குக் குறைவு இருக்காது. ஆனால் இந்த ரோபோக்கள் வேலை செய்யும் விதம் சற்று வித்தியாசமாக உள்ளது.
மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில் இவை வேலையை ஆரம்பிக்கின்றன. சத்தம் இல்லாமல் இயங்கும் இவை, மணல் பரப்பிலும் அதை ஒட்டியுள்ள பாதைகளிலும் அங்கும் இங்கும் நகரத் தொடங்குகின்றன. பார்ப்பதற்கு அவை ஏதோ வேற்றுக்கிரகக் கருவிகள் போலத் தெரிகின்றன.
















Add Comment