இன்றைய நவீனப் பெற்றோர் பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவதைப் பார்க்கிறோம். சோர்வும் களைப்பும் அவர்களது அடையாளங்களாகவே ஆகிவிடுகின்றன. ஆனால் பண்டைக் காலப் பெற்றோர் இத்தனை சிரமங்களை அனுபவிக்கவில்லை. என்றால், நாம் தவறவிடுவது என்ன? அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களின் மனத்தைக் குடைந்துள்ளன. அதன் விளைவாக அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் சில புரிதல்களைத் தருகின்றன.
சிறு குழந்தைக்குப் பெற்றோராக இருப்பது எவ்வளவு களைப்பைத் தருகிறது? இந்தக் கேள்வியை ஓர் இளம் தாயைக் கேட்டபோது, ‘உசுரு மட்டும்தான் மிச்சம் இருக்கு’ என்றார். அதற்குப் பிறகு, அரை மணிநேரத்துக்கும் மேலாக அவர் புலம்பினாலும், அவற்றின் சாராம்சம் இந்த முதல் வரிதான்.
இதனை ஒருசோற்றுப் பதமாகக் கொள்ளலாம். இன்று பல இளம் பெற்றோரின் நிலை இதுதான். ஆற்றலை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சும் இச்சோர்வு, தூக்கத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் தூக்கமின்மையே பிரதானப் பிரச்சினையாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.















Add Comment