29 – மறக்கப்படாத பகை
ரஷ்யாவின் எதிரிகள் பிரிட்டனில் அடைக்கலம் புகுவது வழக்கமாகி இருந்தது. அதிபரை எதிர்த்த பிரிசோவ்ஸ்கி, செச்சனியத் தீவிரவாதிகளை ஆதரித்த அமைச்சர் அகமது ஸகாயேவ் போன்றோர் ஆயுள் தண்டனையிலிருந்து தப்பித்துச் சென்றார்கள். ஆலிகார்க்குகள் பலரும் தங்கள் சொத்துகளை பிரிட்டனில் முதலீடு செய்தார்கள். இதற்கு நன்றியாக அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது பிரிட்டன்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு புதின் பிரிட்டன் அதிபர் டோனி பிளேரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் நீதிமன்ற முடிவே இறுதியானது, தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டார் டோனி. ஈராக் விஷயத்திலும் ரஷ்யாவின் எந்த உளவுத்தகவலும் மதிக்கப்படவில்லை. அதிலிருந்தே டோனி மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்கியிருந்தார் புதின். ஆனாலும் எல்லா வருடங்களையும் போல G8 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார்.
அமெரிக்காவாலும் ரஷ்யா முதுகில் குத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை அழிக்க முழு ஒத்துழைப்பைக் கொடுத்தது ரஷ்யா. பதிலுக்கு அமெரிக்கா செச்சனியாவை ஆதரித்தது. செச்சனியப் புரட்சியாளர்களுக்கு அடைக்கலம் அளித்துத் தொடர்பிலும் இருந்தது. இவர்களைப் பிடிக்க ரஷ்யாவுக்குத் துப்புக் கொடுக்காமல் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்தது மேற்குலகம்.















Add Comment