நீங்கள் உடற்பருமனானவர் என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்களா? அது உண்மையாக இல்லாமல்கூட இருக்கலாம். தற்போது குண்டானவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பலர் உண்மையில் குண்டானவர்கள் இல்லை என்கிறது அண்மையில் வெளியானதோர் ஆய்வறிக்கை.
நம்முடைய உடற்பருமன் BMI என்ற அளவுகோலால்தான் சுகாதார வல்லுநர்களால் அளக்கப்படுகிறது. அந்த அளவுகோலிலேயே பிழை இருந்தால்? இந்தச் சந்தேகம் எழுவதற்குக் காரணங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.
1998ஆம் வருடம், ஜூன் பதினேழாம் நாளில் இரண்டரை கோடி அமெரிக்கர்கள் குண்டாக மாறிப்போனார்கள். அதெப்படி ஒரே நாளில் அப்படி நடக்கும் என்கிறீர்களா? அமெரிக்காவின் தேசியச் சுகாதார நிலையத்தின் அறிவிப்பினால் வந்த வினை. ஆரோக்கியமானவர்களுக்கான BMI உச்சவரம்பை இருபத்தெட்டிலிருந்து இருபத்தைந்தாகக் குறைத்தது அந்த அறிவிப்பு. கேட்டால், உலகச் சுகாதார மையத்தின் (WHO) பரிந்துரை என்றார்கள்.
தொன்றுதொட்டு அரசாங்கங்கள் செய்துவருவதுதான். மாநில நெடுஞ்சாலைகளில்தானே மதுக்கடைகள் இருக்கக்கூடாது? இன்றிலிருந்து அவையெல்லாம் சாதா சாலைகள் என்று அறிவித்துவிட்டால் போகிறது. உலகெங்கிலும் அரசாங்கங்கள் மாறலாம். ஆனால், ஆட்சிமுறைகளில் ஒற்றுமையுண்டு. டாக்குமென்ட் முக்கியம் அமைச்சரே என்ற ரீதியில்தான் அவனியில் அரசாங்கங்கள் இயங்கிவருகின்றன.















Add Comment