62 கிலேசமும் குதூகலமும்
சுந்தர ராமசாமிக்குக் கடைசியாக எழுதிய கடிதத்தில், ‘இப்போது இந்தியாவின் மாபெரும் உரத்தொழிற்சாலையில் மதிய உணவிற்காகவும், ஓய்விற்காகவும் அற்புதமான புல் தரையில் படுத்துக் கிடக்கிறோம்’ என்று எழுதியதில் சற்றுத் தள்ளிப் பேசிக்கொண்டிருந்த மாத்தூரைப் பற்றிக் கிண்டலாகவாவது குறிப்பிட்டிருந்தான். ஆனால் அடுத்துப் படித்திருந்த சுஜாதாவைப் பற்றி எழுதாமல் விட்டது லேசாகக் குத்திற்று. சுதீரைப் பற்றி அவ்வளவு எழுதியிருக்கிறோம் சுஜாதாவைப் பற்றி மட்டும் எதுவும் சொல்லவில்லை. இத்தனைக்கும் அவளோடு எப்போதும் அற்பக் காரணங்களுக்காக வருகிற மனஸ்தாபம் கூட அன்று வரவில்லை. ஆனாலும் அவளைப் பற்றி ஏன் எதுவும் எழுதத்தோன்றவில்லை.
சுதீரைப் பற்றி சுந்தர ராமசாமிக்குத் தெரியாது என்பதால் எழுதவேண்டியிருந்தது. சுஜாதாவைத்தான் ராமசாமி நேரிலேயே பார்த்திருக்கிறாரே. மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்து நிமிஷம் பார்த்திருப்பாரா. அறிமுகப்படுத்தி வைத்ததைத் தவிர ஹலோ என்று அவள் சொன்னதற்குப் புன்சிரிப்பைத் தாண்டி அவர் அப்படி என்ன பேசிவிட்டார் அவளை நினைவு வைத்துக்கொள்ள. அந்த இரவு நேரத்தில் அவர் வீட்டுக்குப் போனதே அத்துலுக்கு போன் பண்ணிக் கவலைப்படவேண்டாம். அருகில்தான் இருக்கிறோம். வந்துகொண்டே இருக்கிறோம் என்பதற்காகத்தானே. அகாலத்தில் வந்திருப்பவர்களிடம் வளவளக்க ராமசாமியென்ன நம்மைப்போல நம் காரியமே முக்கியம் என்று சமய சந்தர்ப்பம் பாராமல் இங்கிதமின்றி வளவளத்துக்கொண்டு இருப்பவரா. அவளைப் பற்றி ஒரு வார்த்தை எழுதுவதை எது தடுத்தது.















Add Comment