168. திஹாரில் ஒரு மகாராணி
தலைமறைவுத் தொண்டர்களின் பிரசுரங்களை அச்சடித்துக் கொடுக்க முன்வந்த அச்சக உரிமையாளர், அந்த விஷயம் வெளியில் தெரிந்துவிட்டால் தன் கதி அதோகதிதான் என்று தெரிந்து வைத்திருந்தார். ஆகவேதான் இந்திரா காங்கிரஸ் ஆதரவாளர் என்பது போல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டார். இதன் உச்சமாக, இன்னொரு காரியமும் செய்தார். தன் அச்சகத்துக்கு வெளியில் பெரிசாக இந்திரா காந்தியின் படத்தை வைத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அந்த வருடம் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியைக் கொண்டாடுகிற தார்மீகத் தைரியம் இந்திரா காந்திக்கு இல்லை. இதைப் புரிந்துகொண்டு, எதிர்க்கட்சியினர் அதனை விமரிசையாகக் கொண்டாடவும், மக்களை ஒன்று திரட்டவும் திட்டமிட்டுச் செயல்பட்டனர். தொண்டர்கள் காந்திஜியின் படமும், உபதேச மொழியும் தாங்கிய அட்டைகளைத் தாங்கி வீதிகளில் வலம் வந்தார்கள். தமது சட்டைகளில் காந்திஜி பேட்ஜை அணிந்து கொண்டார்கள்.
சுவர்களிலெல்லாம் காந்திஜியின் படங்கள் அலங்கரித்தன. அந்தப் படங்களின் அடியில் ‘அசத்தியம், அநீதி, அடக்குமுறை ஆகியவற்றுக்கு மண்டியிடுவது கோழைத்தனம்’ என்ற காந்திஜியின் உபதேச மொழி பொறிக்கப்பட்டிருந்தது.















Add Comment