முடிந்தாற்போல இருந்தாலும் இன்னும் முடியவில்லை. சிந்து நதி நீர் உடன்படிக்கையை ரத்து செய்ததால், இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சென்ற வாரம் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதிநீர் உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இந்தியா அறிவித்தது. பாகிஸ்தானின் 80 சதவீத விவசாயம் சிந்து நதிநீரையே நம்பி உள்ளதால், இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
1947இல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது சிந்து நதிநீர் பிரச்சனை தலையெடுக்க ஆரம்பித்தது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஓடும் பொதுவான நதிகளும் கால்வாய்களும் சிக்கலான புவியிட அமைப்பைக் கொண்டிருந்தன. 1949 ஜூன் மாத இறுதியில், நீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்சனை தீவிரமடைந்தது.
ஆரம்பத்தில் இது அரசியல் சார்ந்த பிரச்சனையாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இதை ஒரு உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்சனையாகத்தான் அணுக வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நேரு கூறினார். நீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்சனையை ஆய்வுக்கு உட்படுத்த, பல்வேறு தொழில்நுட்ப அமைப்புகளும், கூட்டுறவு மேம்பாட்டு ஆணையங்களும் பிரதமர் நேருவால் அமைக்கப்பட்டன.
















Add Comment