தன்யா நாதனின் கடின உழைப்புக்கு ஒரே வாரத்தில் இரண்டு பலன்கள் கிடைத்துள்ளன. 2025ஆம் ஆண்டுக்கான கேரள மகளிர் ஆணையத்தின் ‘ஸ்த்ரீ சக்தி’ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதோடு, கேரள நீதித்துறை சேவைத் தேர்வில் (Judiciary Service Exam) முதல் முயற்சியில் வெற்றி பெற்று, இந்தியாவில் முதல் பார்வையற்ற சிவில் நீதிபதியாகப் பொறுப்பேற்கிறார். உழைப்பும் முயற்சியும் இருந்தால் வெற்றி பெற வெளிப்புறக் குறைபாடுகள் தடைகள் அல்ல என்பதற்கு இருபத்து நான்கு வயது தன்யாவின் வாழ்க்கை ஓர் உதாரணம்.
பார்வைக் குறைபாடு கொண்டவர்களுக்கும், பார்வைத் திறன் குறைந்தவர்களுக்கும் நீதிபதிப் பொறுப்பு இதுவரை வழங்கப்பட்டதில்லை. கோப்புகளைக் கையாளவும் ஆய்வுத் தளங்களுக்குச் சென்று தகவல்களை உறுதிப்படுத்தவும் நீதிபதிகளுக்குப் பார்வைத் திறன் அளவுகோல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்த விதிமுறையால் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளாகப் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு நீதிபதி வாய்ப்பு மறுக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்தச் சட்ட நடைமுறை முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, வரலாற்றில் முதல் முறையாக தன்யா நாதன் நீதிபதியாகப் பொறுப்பேற்கிறார்.
ஓமனில் நகை வடிவமைப்பாளராகப் பணிபுரியும் ஜெகநாதனுக்கும், இல்லத்தரசி பபிதாவுக்கும் இரண்டாவது மகளாக தன்யா பிறந்தார். பிறந்தபோதே அவருக்குப் பார்வைத் திறன் இல்லை. மிகச் சிறிய வயதிலேயே பிரெய்லி மூலம் வாசிக்கவும் பேசவும் கற்றுக் கொண்டார். கண்ணூரில் உள்ள பார்வையற்றோருக்கான மாதிரிப் பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது வழக்கறிஞராக வேண்டும் என்ற விருப்பம் தன்யாவுக்கு ஏற்பட்டது.















Add Comment