இந்தியாவே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. தமிழகத்தில் மாற்றத்தை எதிர்நோக்கி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களித்திருக்கின்றனர்.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்துக்கு மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தீவிர வாக்கு திருத்தத்துக்குப் பிறகு எஞ்சியிருந்த 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி வாக்காளர்கள் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த தேர்தலில் வாக்களித்தனர். எப்போதும் இல்லாத அளவில் வாக்கு எண்ணிக்கை 85.10% சதவீதமாகப் பதிவானது. புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையே இந்த வாக்குச் சதவீத உயர்வுக்குக் காரணம் எனவும், தீவிர வாக்குத் திருத்தத்தின் விளைவாகவே இந்த எண்ணிக்கை உயர்ந்ததாகவும் இருவேறு கருத்துகள் பேசப்பட்டன.
வாக்குகளை எண்ணத் தொடங்கிய சில மணிநேரத்திலேயே திமுகவின் பல அமைச்சர்களும் பின்னடைவு என்ற செய்திகள் வரத்தொடங்கிவிட்டன. ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே தீவிரமாக இருந்ததை அந்தச் செய்திகள் வெளிப்படுத்தின. அந்த மனநிலையை அதிமுக, தவெக, நாதக ஆகிய மூன்று கட்சிகளும் அறுவடை செய்யக் காத்திருந்த நிலையில், தவெக அதைச் சாதித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது. அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்களைத் தாண்டி சமூக ஊடகங்கள் இந்தத் தேர்தலில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தியிருப்பதைத் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியிருக்கின்றன.















Add Comment