இட்லிக்குப் பதில் சூடான மொறுமொறு தோசை கிடைத்தாலே பாக்கியம் என்பவர்கள் பூமர் தலைமுறையினர். தோசையைக் கூட தீண்டத் தகாததாகப் பார்ப்பவர்கள் ஜென் ஸீ தலைமுறையினர். இட்லி, தோசை போன்றவற்றை ரசித்துச் சாப்பிடாததை விடுங்கள். சாப்பிடாமல் தவிர்க்க வழி தேடும் அவர்களுடன் ட்ரெண்டில் இணைய தினமும் பாஸ்தாவும், சாண்ட்விச்சுமா செய்ய முடியும்?
தோசையை மெருகேற்றி அடைக்கு மாறலாம் என முடிவெடுத்தேன். நல்லவேளை, அடை பாட்டி காலத்துச் சிற்றுண்டி என்பதைப் பிள்ளைகள் கண்டுபிடிக்கவில்லை. ரீல்ஸ் பார்த்துப் புதிதாகக் கற்றுக்கொண்டதாக ஏமாந்தார்கள். தேங்காய்ச் சட்னியுடன் அடை, அவியலுடன் அடை எனப் பலவிதங்களில் கிடைப்பதால் ஒருவித ஆச்சரியத்தோடே அடையை அணுகினார்கள்.
எப்போதும் உணவில் சேர்த்துக்கொள்ளும் பருப்பு, கடலைகளை ஒத்திவைத்து கம்பு அடையில் ஆரம்பித்தேன். ஒரு கப் கம்பு, அதன் பாதியளவு அரிசி, அதேயளவு துவரம் பருப்பும் தோலுரிக்காத கறுப்பு உளுந்தும் போதும். கம்பு நான்கு மணிநேரமும், மற்றவை ஒரு மணிநேரமும் ஊறவைத்து அரைத்துவிடலாம். பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு, சோம்பு சேர்த்து அரைப்பது நல்ல மசாலா மணத்தையும் காரத்தையும் கொடுக்கும். மாவு புளிப்பதற்காகக் காத்திராமல் உடனே அடையாகச் சுட்டுவிடலாம்.
















Add Comment