அதிகரித்து வரும் வெப்பநிலையால் இந்தியாவின் பால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பால் உற்பத்தி பாதிக்கப்படும் நிலையில், அதன் விளைபொருள்களான தயிர், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்றவற்றின் உற்பத்தியும் நேரடியாகப் பாதிக்கப்படும். இதனால் பால்பொருள்களின் விலை உயரும் என்று கணிக்கப்படுகிறது.
பெரும்பாலான இந்தியர்களின் காலை வேளைகள், டீயோ காபியோ இல்லாமல் தொடங்குவதே இல்லை. நெய் மைசூர்பாகு, சீஸ் பாப்கார்ன், பனீர் பட்டர் மசாலா, சாக்லேட்டுகள் என்று பால் பொருள்கள் சார்ந்த உணவு வகைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. மண்டையைப் பிளக்கும் இந்தக் கோடை வெயிலை, பலர் தயிரையும் மோரையும் கொண்டே சமாளிக்கின்றனர். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு மாற்றுணவாகவும் பால் பொருள்களே இருக்கின்றன. மொத்தத்தில் பாலையும் பாரதத்தையும் பிரிக்கவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.
இதன் காரணமாகத்தான் இந்தியா உலகிலேயே பெரிய பால் உற்பத்தியாளராகத் திகழ்கிறது. உலகளாவிய பால் உற்பத்தியில் சுமார் இருபத்தைந்து சதவீதம் இந்தியாவிலிருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் பால்பொருள்களின் நுகர்விலும் உலகளவில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.
















Add Comment