24 – நிம்மதியை இழக்க முடியாது
காதல் இல்லாத கல்லூரி வாழ்க்கையா? கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் வலோத்யாவின் காதல் தொடங்கியது. நண்பன் விக்டர் கமாரினின் தங்கை, லூத்மிலா கமாரீனா. மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த லூத்மிலா அழகும் திறமையும் கொண்டிருந்தார். அதைவிட அதிகமாக, வலோத்யா மீது அக்கறை கொண்டிருந்தார். மற்றவர்கள் வலோத்யாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதை, இவர் கேட்காமலேயே புரிந்துகொள்பவர். நான்கு வருடங்கள் காதலித்தவர்கள், பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணத்துக்குத் தயாரானார்கள்.
ரஷ்யர்கள் பின்பற்றும் மரபுவழித் தேவாலயங்களில் திருமணம் இரண்டு சடங்குகளைக் கொண்டிருக்கும். முதலில் திருமண ஜோடி நிச்சய மோதிரங்களை அணிவிப்பார்கள். பிறகு தேவாலயத்தில் நடக்கும் சிறப்பு வழிபாட்டில் மெழுகுத்திரிகளை ஏந்தி திருமண வாக்குமூலம் கொடுப்பார்கள். எந்த நிர்ப்பந்தமுமின்றி மனமார மணந்து கொள்கிறோம்; இன்பத்திலும், துன்பத்திலும் சேர்ந்திருப்போம் என்று அனைவரும் கேட்கும்படி சொல்வார்கள்.
மணமக்களின் மனப்பூர்வமான சம்மதத்தை அறிந்ததும் பாதிரியார் இருவரையும் ஆசீர்வதித்து மலர்க் கிரீடங்களை அணிவிப்பார். ஜெபத்துக்குப் பிறகு ஒரே ஒயின் பாத்திரத்தில் திருமணமான ஜோடி ஒயின் அருந்துவார்கள். பாதிரியாரைத் தொடர்ந்து இருவரும் கைகோர்த்தபடி பீடத்தைச் சுற்றி வலம் வருவதோடு திருமணச் சடங்கு நிறைவுபெறும். பிறகு வீட்டிலும், மண்டபத்திலும் சுற்றத்தாரோடு விருந்துண்டு மகிழ்வார்கள். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்திருந்தன. நிச்சய மோதிரங்கள், தேவாலய வழிபாட்டுக்கான ஏற்பாடுகள், வரவேற்பு மண்டப அலங்காரங்கள், விருந்து என இருவீட்டாரும் சேர்ந்து செய்து முடித்திருந்தார்கள்.















Add Comment