111. கண்கட்டு
சார்வாகனின் குடிசைக்குள் தத்தன் உறங்கிக்கொண்டிருந்தான். ஒரு சிசுவினைப் போல உடலத்தைக் குறுக்கிக்கொண்டு, கால்களை வளைத்து, இடப்புறம் திரும்பிப் படுத்திருந்தான். தரையில் விரிப்பதற்குக் கூட அங்கு ஏதுமில்லை. ஆனால் தத்தன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஓதம் மிகுந்த காற்றோ, பாதிரி வனத்து இரவுப் பூச்சிகளின் ஓயாத இறைச்சலோ, திடீர் திடீரென்று கேட்கும் ஊளான்களின் ஊளைச் சத்தமோ அவனது உறக்கத்தைக் கலைக்கவில்லை. அவன் மிகவும் களைத்திருந்தான். அது உடலத்தில் உண்டான களைப்பல்ல. நெடு நேரம் அவன் அழுதுகொண்டே இருந்ததில்தான் அத்தனைக் களைப்படைந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. தவிர, அவனுக்கு அவனது துக்கத்தின் ஊற்று எங்குள்ளதென்று தெரிந்துவிட்டிருந்தது. அது அளித்த குற்ற உணர்வில் இருந்து அவனால் விடுபடவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவன் அன்றெல்லாம் சார்வாகனிடம் அதையே சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தான்.
ஐயன் என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் சொன்னவண்ணம் அன்றைக்கே நான் என் வீட்டாரிடம் உங்களைக் குறித்தும் உங்களுடன் குடந்தைக்குச் செல்ல எண்ணியதைக் குறித்தும் சொல்லியிருக்க வேண்டும். அதனைச் சொல்லாவிடினும் உங்கள்பால் என் சிந்தை ஈர்க்கப்படுவதையேனும் தெரிவித்திருக்க வேண்டும். என் மூட மனம் எதனால் அதை ஒத்திப் போட்டுக்கொண்டே இருந்ததென்று எனக்கு இப்போதும் விளங்கவில்லை. என்னால்தான்; என்னால் மட்டும்தான் நீங்கள் இன்றைக்கு அத்தனை அவச் சொற்களைக் கேட்கும்படி ஆகிப் போனது. இனியொரு முறை இப்படிப்பட்ட தவறைச் செய்ய மாட்டேன். என்னை நம்புங்கள்.
சார்வாகன் அமைதியாகவே இருந்தான். அவனிடத்தில் சினமோ, வெறுப்போ, ஏமாற்றமோ, ஏற்காத்தன்மையோ சற்றும் இல்லை. தத்தனின் மீது சிறிய அளவில் பரிதாப உணர்ச்சியேனும் இருக்குமென்று எதிர்பார்த்தேன். வியக்கத்தக்க வகையில் அதுவுமில்லை. விரும்பிப் பழகிய ஒருவனையும் எப்படி ஒரு வழிப்போக்கனைப் போலவே நினைக்கவும் நடத்தவும் முடியுமென்று திகைப்பாக இருந்தது. என் திறன் அனைத்தையும் செலுத்தி அவனது சிந்தையை நான் அகழ்ந்து பார்த்தேன். தத்தனிடம் மட்டுமல்ல. கருவூர்ச் சித்தரையும் அவன் அவ்வாறே வரித்திருந்தான். வாழ்வில் எதிர்கொள்ள நேர்ந்த ஒரு வழிப்போக்கர். அதற்கு அப்பால் ஏதுமில்லை.
















Add Comment