மூன்று வேளை உண்கிறோம் என்றாலே நம்மை மேலும் கீழுமாகப் பார்க்கும் காலம் இது. நீண்ண்ண்ட இடைவேளை விட்டு உண்ணும் விரதங்கள் பிரபலமாகி வருகின்றன. இதற்கிடையில், நமது ருசிஞர் படையின் பிரச்சினையே வேறு. மூன்றாவது வேளையான இரவு உணவுக்குக் காத்திருக்கும் இந்த நீண்ண்ண்ட இடைவேளையை எப்படிச் சமாளிப்பது?
காலையைப் போல மாலையும் ஒரு வேளைதானே? அப்போதும் பசிக்கிறது. மதியத்தைப் போல விருந்துண்ணா விட்டாலும் வயிற்றை நிறைக்குமளவு கொஞ்சம் நொறுக்க வேண்டாமா? குறைந்த பட்ஜெட்டிலேயே இதற்கான தீர்வு உள்ளது. ஒரு முட்டை பப்ஸ், ஒரு காபி போதும். அனுபவத்தில் சொல்கிறேன், இரவு வரை பசி தாங்கும்.
காய்ந்த சருகின் மேல் கால்வைத்து நடக்கும் சத்தத்தோடு கச்சேரியைத் தொடங்க வேண்டும். பப்ஸின் ஓரத்தில் முதல் கடி. உப்புத் தோய்ந்த பேப்பரைப் போலிருந்தாலும் ருசிக்கும். கொஞ்சம் தட்டில் சிந்தும். அதைப் பற்றிக் கவலை வேண்டாம். அதற்குப் பக்கத்திலேயே அடுத்த கடி. இப்போது வாய்ப்பகுதியிலும் பப்ஸ் துகள்கள் ஒட்டியிருக்கும். இதுவே நீங்கள் பப்ஸ் சாப்பிடத் தயாராகிவிட்டீர்கள் என்பதற்கான அடையாளம். அவசரப்பட்டுத் துடைக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு வீரனுக்கு மண்ணைப் போல பப்ஸ் பிரியனுக்கு இந்தத் துகள்கள்.
















Add Comment