வடை என்ற இரண்டெழுத்துக்கு வசியப்படாதோரும் உண்டோ? தட்டு வடை செட் என்ற பெயரைப் பார்த்ததும் உள்ளே நுழைந்தோம். வடையில் புதிய வகை என்று நினைத்தோம். பக்கத்துத் தட்டுகளைப் பார்த்த பிறகே அது தட்டை முறுக்கில் செய்த தின்பண்டம் எனப் புரிந்தது. எங்கள் ஊரில் அதைத் தட்டை முறுக்கு என்போம். சரி, வடைக்கு ஏமாறுவது நமது பாரம்பரிய வழிவந்தது.
நறுக்கிய வெங்காயம், கேரட், பீட்ரூட், மாங்காய் சீவல் என பேல் பூரிக் கடைகளில் இருக்கும் பலவற்றையும் காண முடிந்தது. ஐந்து தட்டை வடைகளை ஒரு தட்டில் வைத்தார்கள். ஒவ்வொன்றின் மேலும் புதினா, கொத்துமல்லி சட்னி தடவினார்கள். இல்லையில்லை, எண்ணெய் ஊற்றப் பயன்படுத்தும் மினி குழிக்கரண்டியில் சட்னியை எடுத்து தட்டைக்குக் காண்பித்தார்கள். ஏனெனில் அந்தத் தட்டை முறுக்கே மூன்று விரல்களில் அடங்குமளவுதான் இருந்தது.
கேரட், பீட்ரூட், வெங்காயம் மூன்றிலும் ஒரு பிடி எடுத்து அந்த மினி தட்டையின் க்ரீன் சட்னிக்கு மேல் வைத்தார்கள். சுமை தாங்க முடியாத பொதி மாடு போலானது தட்டை. அதன் கோபத்தைக் கூட்ட தக்காளி, மிளகாய் சேர்த்த சிவப்பு காரச் சட்னியைக் காண்பித்து, மேலே இன்னொரு தட்டையைக் கொண்டு மூடினார்கள். ஐந்து தட்டை முறுக்குகளுக்கும் இந்த ஐந்தடுக்கு சீர் செய்து எங்களிடம் நீட்டினார்கள்.
















Add Comment