பிக்குகளைக் கண்டதும் சிங்கள பௌத்த மக்கள் முதலில் கையெடுத்து வணங்குவார்கள். காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளிலும், பூரணை தினங்களிலும் விகாரைகளுக்குச் சென்று பிக்குகள் சொல்வதை மணிக்கணக்கில் அமர்ந்து கேட்பார்கள். கிராமங்களில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பிக்குகளுக்கு முக்கிய இடம் உண்டு. பல சிங்களக் குடும்பங்களில் தங்கள் பிள்ளைகளில் ஒருவரைத் துறவறம் பூண மனப்பூர்வமாக அனுப்பி வைப்பதும் உண்டு.
ஏப்ரல் 25, சனிக்கிழமை இரவு. தங்களுக்குக் கிடைத்த தகவல் உண்மை என்பதை உறுதி செய்த சுங்கப் பிரிவு அதிகாரிகள் திகைத்துப் போனார்கள். நாட்டைப் போலவே அரச துறைகளிலும் பௌத்த சிங்கள அதிகாரிகள்தான் பெரும்பான்மை. அதனால் அவர்களும் பிக்குகள் விமான நிலையத்துக்கு வந்தால் மரியாதையாக நடத்தத் தவறுவதில்லை.
அந்த பௌத்த பிக்குகள் தாய்லாந்து சென்று திரும்பியிருந்தார்கள். மொத்தம் 22 பேர். ஒவ்வொருவரிடமும் கனமான பயணப் பைகள். சுற்றிலும் பாடசாலைப் பிள்ளைகள் பயன்படுத்தும் பொருட்களுக்குள் பொதிக்கப்பட்டு, சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டு இருந்தது அந்தப் பொருள்.















Add Comment