165. விநாச காலே விபரீத புத்தி
1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா சுதந்தரம் பெற்ற நேரத்தில் நாடே விழித்திருந்தது. 1975 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அதே இந்தியா தன் சுதந்தரத்தை இழந்த சமயத்தில் நாடே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது.
இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சின்ஹாவினுடைய தீர்ப்பினால் ஆடிப்போனார் இந்திரா காந்தி. அதனால் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள அவர் நிகழ்த்திய அதிரடி நாடகத்தின் முதல் காட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது. டெல்லி நகர வீதிகளில் ஏராளமான போலிஸ் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா ஒரே இரவில் ஒரு சர்வாதிகாரியின் கட்டுப்பாட்டுக்குள் நழுவி விழுந்து கொண்டிருந்தது.
ஜூன் 25ஆம் தேதி மாலை இந்திரா காந்தியும், சித்தார்த் சங்கர் ரேவும் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமதை ராஷ்டிரபதி பவனுக்குச் சென்று சந்தித்தார்கள். நாட்டின் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார்கள். அன்று இரவு, நெருக்கடி நிலைப் பிரகடன ஆவணம் ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அன்று நள்ளிரவுக்குச் சற்று முன்பாக ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது அந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.















Add Comment