115. தொடுதல்
பாதிரி வனத்தின் மரங்கள் காற்றின் மென்மையை ஏந்தி அசைந்துகொண்டிருந்தன. சார்வாகனின் குடிசையை அடுத்திருந்த வேம்பின் மீது அமர்ந்து காகங்கள் கரைந்தன. அத்தருவின் அடியில் சூழ்ந்திருந்த நிழலுக்குள் வேம்பின் பூக்கள் உதிர்ந்து உருண்டன. அங்கிருந்து பார்க்கத் தொலைவில் ஒரு கோடிழுத்தாற்போலப் புலப்பட்ட நதியின் கரையிலிருந்து உதுமானி நாயனாரும் கருவூர்ச் சித்தரும் பேசியபடி வந்துகொண்டிருந்ததைச் சார்வாகன் கண்டான். இனி சிந்தித்துக் குழப்பமுற ஒன்றுமில்லை. மூன்று கிழமைகள் தவத்தில் அமரச் சொல்லிச் சித்தர் உத்தரவிட்டிருக்கிறார். பழக்கமில்லாததுதான். விருப்பமோ ஆர்வமோ கூடாத முற்றிலும் புதியதொரு நடவடிக்கையாகத்தான் இருக்கப் போகிறது. முறைப்படி ஒரு தவத்தை இயற்றுவது குறித்து எண்ணிப் பார்த்ததுமில்லையே என்று அவன் சிறிது கவலை கொண்டதைக் கண்டேன். கருவூராரே அதற்கும் வழி சொல்வார் என்று எண்ணிக்கொண்டான். கடவுளைக் கருதாத தவம். பிரம்மத்தைக் கருதாத தவம். வேறு எதனைக் கருதி எதை அடையவிருக்கிறோம் என்று முதலில் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டுவிட வேண்டும் என்று அவன் நினைத்த மாத்திரத்தில், சித்தரும் உதுமானி நாயனாரும் அவனருகே வந்து சேர்ந்தார்கள்.
நான் தயாராக இருக்கிறேன் ஐயனே,
என்று சார்வாகன் சொன்னான்.
நல்லது. நதிக்குச் சென்று நீராடிவிட்டு வா என்று கருவூரார் சொன்னதுமே அவன் நதிக்கரையை நோக்கிப் பாய்ந்தான். எதிரில் வந்துகொண்டிருந்த காளத்தியும் அபுதுவும் அவனது வேகத்தின் காரணம் புரியாமல் திகைத்து நிற்க, ஓடிய வேகத்தில் அவர்களை இடித்துத் தள்ளிக்கொண்டு விரைந்தவன், நேரே நீரில் பாய்ந்து சிறிது நீந்தி நிமிர்ந்து நின்றான். சித்தருக்குத் தெரியும்படியாகத் துள்ளிக் குதித்து முழுக்குப் போட்டு மீண்டான். காளத்தியும் அபுதுவும் சித்தர் நின்றிருந்த இடத்தை நெருங்கிய நேரம், சார்வாகனும் ஓடி வந்து மூச்சிறைக்க நின்றான்.
















Add Comment