71 யுத்த பூமி
குயிக்ஃபிக்ஸ் லகாவ் என்று வழியில் ஒருவர் சொன்னதைக் குறிப்பிட்டு, ‘இவர்களுக்காக நாம் ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து, பைத்தியக்காரர்கள் போல பாரத் ஜோடோ ஜோடோ பாரத் என தொண்டைத் தண்ணி வற்றக் கத்திக்கொண்டு ஊரூராய் போய்க்கொண்டிருக்கிறோம்’ என்று இவன் எதிர்ப்படுகிறவர்களிடமெல்லாம் பொங்கிக்கொண்டிருந்தான்.
அதைக் குறிப்பிட்டு, கட்டிலில் படுத்திருந்த பாபாவிடம், ‘யாருக்காக இந்த சைக்கிள் பயணம், இந்துக்களான இவர்களே இப்படி ஏளனமாகப் பேசுகிறார்களே. கொந்தளித்துக்கொண்டிருக்கும் சீக்கியர்கள் நம்மை எப்படிப் பார்ப்பார்கள்’ என்று சிலர் அங்கலாய்த்தனர்.
‘ரிப்பேர் பண்ணமுடியாத அளவுக்கு சமூகம் இப்படிப் பிளவுண்டு கிடப்பதால்தான் நாம் இந்தப் பயணத்தையே மேற்கொண்டிருக்கிறோம். எதையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிற, எல்லாவற்றையும் மனதுக்கு ஏற்றிக்கொள்கிற பூஞ்சையான மனம் கொண்டவர்கள் காரியம் செய்யப் பொதுவெளிக்கே வரக்கூடாது. காந்தியைப் படிப்பதும் திரையில் பார்ப்பதும் எளிது. அவர் வழியில் எடுத்த காரியத்தில் மட்டுமே கண்ணாக இருப்பது அவ்வளவு எளிதன்று. காந்தி கடவுளில்லை; கர்மயோகி. நேற்றைக்கு உயிரையே கொடுக்கத் தயாராக இருந்தவர்கள், யாரோ ஒருவர் சொன்ன வார்த்தைக்காகத் துவண்டுவிடலாமா. திட சித்தம் கொண்டவன், சிங்கமாக இருப்பதைவிட கழுதையைப் போல கஷ்டங்களைச் சுமக்கவும் எல்லாவிதத் தூற்றுதல்களையும் ஏற்கத் தயாராக, எருமையின் தடித்த தோலுடனும் இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் எதையுமே செய்யமுடியாது’ என்று ஆம்தே சமாதானப்படுத்தினார்.
















Add Comment