எலன் லூயிஸ் ஹெர்ண்டன்
தான் இல்லாமல் இருந்ததன் மூலம் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்த முதல் பெண்மணி. ஒரு நாள் கூட வெள்ளை மாளிகையில் வாழக் கொடுத்துவைக்காதவர். ஆனால் அவர் நினைவுகள் இல்லாமல் வெள்ளை மாளிகையில் ஒரு நாள் கூடக் கழிந்தது இல்லை.
எலன் லூயிஸ் ‘நெல்’ ஹெர்ண்டன் (Ellen Lewis Herndon) ஆகஸ்ட் 30, 1837 அன்று வர்ஜீனியாவின் கல்பெப்பர் கோர்ட் ஹவுஸ் நகரில் பிறந்தார். அவரது தந்தை வில்லியம் லூயிஸ் ஹெர்ண்டன் (William Lewis Herndon) கடற்படை அதிகாரி. கடல் என்பது அவருக்கு வாழ்க்கை; அந்தக் கடலே அவரை எடுத்துக்கொண்டது. 1857ஆம் ஆண்டு, எஸ்.எஸ். சென்ட்ரல் கப்பலை வழிநடத்திச் சென்றார். அது கடும் சூறாவளியில் சிக்கியது. அதிலிருந்த 152 பெண்களையும் குழந்தைகளையும் உயிரோடு வெளியேற்றிவிட்டு, தான் மட்டும் கப்பலுடன் ஆழத்தில் மறைந்தார். நெல்லுக்கு அப்போது இருபது வயது. தந்தை அவளுக்கு வார்த்தைகளால் எதுவும் சொல்லவில்லை, ஆனால் கடமையைக் காட்டினார். அந்த மரணம் அவள் மனதில் ஒரு தீராத வலியாகப் பதிந்தது.
நெல் வாஷிங்டன் டிசியில் வளர்ந்தாள். அவளது குரலில் இயற்கை இனிமையை வாரிக்கொடுத்திருந்தது. செயின்ட் ஜான்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்தின் பாடகர் குழுவில் சேர அழைப்பு வந்தது. அவள் ஏற்றாள். அந்தக் குரல் பிற்காலத்தில் நியூயார்க்கின் மெண்டல்சோன் கிளப் மேடைகளில் ஒலித்தது. இசை அவளுக்கு உலகம்; ஓர் அடைக்கலம்.















Add Comment