பிறந்து முதல் முறை நீர்வீழ்ச்சியைப் பார்க்கும் குழந்தைகள் உடனே அழுகின்றன, இல்லை கைகொட்டிச் சிரிக்கின்றன. முதல் மழை, மின்னல், நெருப்பு எல்லாம் ஆதி மனிதனுக்கு விந்தையென இருந்திருக்கும். இன்றும் கூர்ந்து பார்த்து யோசித்தால் நமக்கும் இவை பேரதிசயமே. மனிதன் இயற்கையில் தேடுவது இவ்வியப்பையே.
அவனை அதிரச் செய்த இன்னொரு விஷயம், ஒரு உயிரிலிருந்து இன்னொரு உயிர் வெளிப்படுவது. இயற்கையில் தானாய் நிகழும் இச்செயல்களின் முன் ஒன்றும் செய்ய இயலாதவனாய் கை கூப்பி நின்றான். எதிர்பார்த்தவனாக வேண்டி நின்றான். பெயர்களிட்டான். வியப்பைப் பிறரிடம் கூறினான். சுவர்களில் வரைந்தான். கல்லில் வடித்தான். சொற்களால் என்றும் அழியாமல் காத்தான். இந்தச் சங்கிலியில்தான் நாமும் இணைகிறோம்.
இந்திரன், வருணன், அக்னி, சிவன், விஷ்ணு என்ற ஆண் வரிசையில் பெண் தெய்வங்கள் என்று தோன்றின? அதன் தொடர்ச்சியை இன்று நாம் காண்கிறோமோ?
தாய்மையே பெண் வழிபாட்டின் ஆரம்பம். இதன் நடுகல் சான்று உடையாநத்தத்தில் இருக்கிறது. வரலாற்றுக்கு முந்தைய காலம் பெருங்கற்காலம் (கி-மு 1000 முதல் 300 வரை). நடுகல் இதன் வழிபாட்டுச் சின்னம். இதில் விசிறிக்கல் என்பது ஒருவகை. பெரிய, அகன்ற பெண் உருவம் கைகளை விரித்து அமர்ந்திருக்கும் நடுகல். இது பேரன்னையின் உருவம், வளமையின் குறியீடு என்று தொல்லியல் சொல்கிறது. ஒருகணம் கண்மூடிப் பின்னர் இதை நோக்கினால் கொற்றவையோ அம்மனோ அமர்ந்திருப்பது கண்ணில் தெரியும். உலகெங்கும் இவ்வகைக் கற்கள் கண்டறியப் பட்டுள்ளன.
















Add Comment