12. கனவேற்றம்
ஆயிரத்து எண்ணூற்றுப் பத்தொன்பதாம் வருடம், ஜனவரி மாதம் ஆறாம் தேதி. அதிகாலை மார்கழிக் குளிரில் உறைந்து போய் ஊரே அடங்கிக்கிடந்த வேளை. கோயம்புத்தூர் எல்லையில் தீப்பந்தங்களும், புழுதியுமாய் பரபரப்பு விரவி, மனிதக்குரல்களும் விலங்குக் குரல்களும் இணைந்து குழப்பமான ஓசைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. குதிரை பூட்டிய சாரட் வண்டியில் தங்கள் குடியிருப்பிலிருந்து பாப்டிஸ்ட் லூயி சற்றுத் தாமதமாகத்தான் கிளம்பியிருந்தார். ஏற்கெனவே சரியில்லாது இருக்கும் உடல்நிலையால், அதிகாலையே கிளம்பவேண்டாம் என்று ஜோன்ஸ் அவரை எச்சரித்திருந்தார். அவர் பொழுது விடிந்தபின் கிளம்பினால் போதும் என்றுதான் சொல்லியிருந்தார்.
ஆனால் முழுவதும் விழித்திருந்த நீண்ட இரவு அவரை அதற்கு மேலும் பொறுமையாக இருக்க விடவில்லை. இருள் பிரியும் முன்பே கிளம்பியிருந்தார். நகரம் மொத்தமும் அசைவின்றி உறைந்து போயிருந்தது. மரங்களைக் குளிர்காற்று தழுவி வலுக்கட்டாயமாக அசைத்து, ஏற்கெனவே இருந்த குளிரை இன்னும் அதிகரித்தது. லூயி கையுறையையும், காலுறையையும், குளிர் உடைகளையும் தாண்டி உள்ளே நுழைந்து விளையாடும் குளிரைக் கண்டு ஆரம்பத்தில் பயந்தார். பின்பு மலைப் பயணத்தை எண்ணி தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொண்டார்.
தூரத்திலிருந்து பார்க்கும்போது நகர எல்லையில் ஒரு போர்க்களத்தைக் கண்டார். தீப்பந்தங்களால் ஒளி பரவியிருந்தது. அவை எழுப்பிய புகை, பனி மண்டலத்தைக் கலைத்துக் கொண்டிருந்தது. அவற்றிலிருந்து எழுந்த எண்ணெய் மணம் சில மைல்கள் வரை வீசிக்கொண்டிருந்தது. யானைகளின் பிளிறல்களும் குதிரைகளின் கனைப்புகளும் அடிவயிற்றை என்னவோ செய்தன. பரபரப்பு உச்சத்தை எட்ட, அந்தக் கூட்டத்தில் நடுநாயகமாக நின்றிருந்த சல்லிவனையும் ஜோன்ஸையும் அணுகினார்.















Add Comment