புதிய தேர்தலில் புதுப் பிறவி
2018ஆம் ஆண்டு நான்காவது முறையாக அதிபரானார் புதின். ஆறு வருடங்கள் பதவியில் நீடிக்கலாம் என்றாலும் அதன் பிறகு தொடர முடியாது. இருமுறை மட்டுமே தொடர்ந்து அதிபராக இருக்க ரஷ்ய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கும். சென்ற முறை இதே பிரச்சினையால் திமித்ரி மெத்வதேவ்வை அதிபராக்க வேண்டி வந்தது. இம்முறை இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண நினைத்தார் புதின்.
‘என்றாவது ஒரு நாள் எல்லோரும் பதவி விலகத்தான் வேண்டும். அதுவரை என்ன செய்தோம் என்பதே நினைவில் நிற்கும்’ என்று பதவி நீட்டிப்பைக் குறித்து முதலில் குழப்பமாகவே பேட்டியளித்தார் புதின். பின்னர், ‘ரஷ்யாவில் நடப்பதற்கும், இனிமேல் நடக்கப் போவதற்கும் நான் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது’ என்று அவர் சொன்னது அவரது எண்ணங்களைத் தெளிவாக்கியது.
மக்கள் இதைப்பற்றி யோசிப்பதை எப்போதோ நிறுத்திவிட்டார்கள். சோவியத் யூனியனின் பிளவு அவர்களை அப்படியொரு பயத்தில் ஆழ்த்தியிருந்தது. நிலையான ஆட்சி இல்லையென்றால் நாடு எப்படிச் சீரழியும் என்பதை அனுபவித்தவர்கள் அவர்கள்.















Add Comment