193. பழி வாங்கும் படலம்
காந்தி சமாதியில் ஜெயபிரகாஷ் நாராயண் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, ஜனதா கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற அனைத்து எம்.பிக்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் புகைப்படம் சுதந்தர இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காட்சியாக இடம்பெறத்தக்கது.
அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்காத ஒரு முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர் சரண் சிங். அவர் வராமல் போனதற்கு அரசியல் காரணம் ஏதுமில்லை. அவருக்குத் திடீரென்று உடல்நலம் குன்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்த பிரதமர் மொரார்ஜி தேசாயா? ஜகஜீவன் ராமா? என்ற கேள்விக்கு ஜெ.பி கருத்தொருமித்த தேர்வுக்கான முயற்சியில் இறங்கி இருந்த சமயம், ஜனசங்கமும் பழைய காங்கிரசும் மொரார்ஜிக்கு ஆதரவு தெரிவித்தன.
ஜகஜீவன் ராமுக்கும் பிரதமராக வேண்டும் என ஆசை இருந்தது. அவர் அதற்காகத் திரைமறைவில் ஆதரவு திரட்டிக் கொண்டிருந்தார். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், மது தண்டவதே போன்றவர்கள் ஜகஜீவன் ராமைப் பிரதமர் ஆக்குவதன் மூலமாகப் புதிய அரசின் சமூக சீர்திருத்தம், சமூக நீதி குறித்த அழுத்தமான நிலைப்பாட்டினை மக்கள் மனதில் நிலை நிறுத்தலாம் என்று கூறினார்கள்.















Add Comment