மீண்டும் சம்மன்
தேவராஜ் அர்ஸ் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தின் காரணமாக, காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியும் நாடாளுமன்றக் குழுவும் கூடி உடனடியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கின.
ஜூன் 25ஆம் தேதி அர்ஸ், கர்நாடகா காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். கர்நாடகச் சட்டமன்றத்தின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அர்ஸின் பின்னால் அணிவகுத்து நின்றார்கள்.
இந்திரா காங்கிரஸ் அல்லாத காங்கிரஸ்காரர்கள் அனைவருக்கும், ‘இந்திரா காந்தி இல்லாத காங்கிரஸ் கட்சியை உருவாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது! எல்லோரும் ஒன்றிணைவோம்!’ என்று அர்ஸ் அறைகூவல் விடுத்தார்.
‘இதுவும் நன்மைக்கே!’ என்று கருதினார் இந்திரா காந்தி. தன் தலைமையிலான காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கிறது என்ற பிம்பம் இருந்தால், தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் ஜனதா கட்சியினர் சுயநலத்தோடு தங்களுக்குள் கோஷ்டிப் பூசலில் ஈடுபடுவார்கள். அது இறுதியில் தனக்குச் சாதகமாக இருக்கும் என்று அவர் கணக்குப் போட்டார்.















Add Comment