3. நால்வர்
வரலாற்றுத் தருணங்கள் நிகழும்போதெல்லாம் அவை மற்றும் பல சாதாரணப் பொழுதுகள் போலத்தான் கடந்து சென்றிருக்கின்றன. காலம் கடந்து, மானுடம் நிதானித்து அவற்றைப் பதிவு செய்யும்போதுதான் அத்தருணங்களின் முக்கியத்துவம் உலகிற்குத் தெரியவருகிறது.
அப்படித்தான் 1811ஆம் வருடம் ஒரு கோடைக்காலக் காலையில் அந்தச் சம்பவமும் நடந்திருக்கிறது. வில்லியம் காரோ (William Karo) என்கிற அப்போதைய கோயம்புத்தூர் ஆட்சியர் தனது அலுவலகத்திற்கு வந்தபோது, புதிய சர்வேயராக நியமிக்கப்பட்டிருந்த வில்லியம் கெய்ஸ் (William Keys) என்கிற பிரிட்டிஷ் இளைஞன் தனது இருக்கையில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறான். அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் மெக்மோகன் (MacMohan) என்கிற அப்ரெண்டிஸ் அலுவலன் ஒரு கோழி இறகைக் கொண்டு கண்களை மூடி இதமாகக் காது குடைந்து கொண்டிருந்திருக்கிறான்.
கோடை வெப்பம் தந்த எரிச்சல், காத்திருக்கும் பணிகள் மீதான மலைப்பு, மதராஸ் ஆளுநரிடமிருந்து தொடர்ந்து வருமானத்தை உயர்த்தச் சொல்லி வரும் கடிதங்கள் என ஏகப்பட்ட கடுப்பில் இருந்த கலெக்டர் காரோவுக்கு இந்த இரண்டு ஊழியர்களின் சோம்பேறித்தனமான செய்கைகள் கடும் கோபத்தை வரவழைத்திருக்கின்றன.















Add Comment